Pongu Tamizh Pongu Tamizh  

புத்தனின் பெயரால்: திரைப்பட சாட்சியம்

புத்தனின் பெயரால்: திரைப்பட சாட்சியம்
யமுனா ராஜேந்திரனுடன் உரையாடல்

 

கவிதை, அரசியல், தத்துவம் மற்றும் சினிமா போன்ற அனைத்துமே மனித விடுதலை குறித்த தேடலின் இணைந்த கண்கள் என்பதான புரிதலுடன் இயங்கி வருபவர் ஜமுனா ராஜேந்திரன். இந் நோக்கில் இதுவரை இருபது வரையான நூல்களை வெளியிட்டிருப்பவர்.

அரசியல் சினிமா, ஆபிரிக்க சினிமா, அரசியல் இஸ்லாம், நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை, பாலத்தின் மீது மக்கள் போன்றன இவரது நூல்களிற் சில. இலத்தீன் அமெரிக்கக் கவிதைகள், குர்தீஸ் கவிதைகள் போன்றன இவரது கவிதை மொழிபெயர்ப்பு நூல்களில் முக்கியமானவை.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமைக்கான பின்னணிகள், இப் போராட்டத்தின் போக்கில் ஏற்பட்ட முரண்பாடுகளும் சவால்களும், சிங்கள மக்களுடன் இப் போராட்டம் கொண்டிருந்த உறவு மற்றும் முள்ளிவாய்க்கால் பேரழிவு போன்ற விடயங்கள் குறித்து உலகெங்கும் வெளியிடப்பட்ட ஆங்கில, தமிழ், சிங்கள, மலையாள, கன்னட மொழியிலான திரைப்பட சாட்சியங்களின் தொகுப்பாக ஜமுனா ராஜேந்திரனால் புத்தனின் பெயரால்: திரைப்பட சாட்சியம் என்ற நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

இம்முயற்சி குறித்தான ஓர் உரையாடலாக எமது சந்திப்பு அமைந்தது.

 

புகலிட சினிமா எனும் புத்தகத்தை அடுத்து ஈழ சினிமா குறித்த புத்தனின் பெயரால் : திரைப்பட சாட்சியம் என புதிதாக ஒரு நூலை எழுதியுள்ளீர்கள். இந்த நூல்களை எழுத வேண்டும் என உங்களுக்குத் தோன்றியதற்கான சூழல், அதன் பின்னிருந்த காரணிகள் என்ன?

தொண்ணூறுகளின் மத்தியில் புகலிட சினிமா நூல் வெளியானது. பிரான்சில் வாழும் முகம் படத்தின் இயக்குனர் அருந்ததி தனது முகம் பதிப்பகத்தின் சார்பாக அந்த நூலைக் கொண்டு வந்தார். அருந்ததியும் நானும் அந்த நூலின் தொகுப்பாளர்களாக இருந்தோம். சென்னையில் அச்சான அந்த நூலின் விநியோகம் தொடர்பாக ஆற்றமுடியாத மனக்குறைகள் எனக்கும், அருந்ததிக்கும் இருக்கிறது. எனது கட்டுப்பாட்டுக்குள் அமையாது போன அந்தச் சூழல் குறித்து எனது மனக்குறையை என்றும் என்னால் நிவர்த்திக்க இயலாது என்பது ஒரு சோகம்.

தொண்ணூறுகளில் ஐரோப்பாவில் ஈழத்தமிழர்களினிடையில் உருவாகி வந்த குறும்பட அலையொன்றின் தாக்கத்தினை எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் எனும் உத்வேகமே அந்த நூல் வெளியாவதற்கான காரணமாக அமைந்தது. பிரான்சில் வாழும் இயக்குனர் அருந்ததி, சுவற்சர்லாந்தில் வாழும் இயக்குனர் அஜீவன், ஜெர்மனியில் வாழும் இயக்குனர் ஜெகாதரன் போன்றவர்கள் இல்லையானால் அந்த நூல் வெளியாகி இருக்காது.

புகலிட சினிமா  எதிர்கொள்ளும் திரைப்பட கரு சார்ந்த, அதனது தொழில்நுட்பம் சார்ந்த, விநியோகம் சார்ந்த, தமிழக சினிமா புகலிட சினிமாவின் முன்பு வைத்திருக்கும் பகாசுர அதிகாரம் சார்ந்த, புகலிடத் திரைப்படைப்பாளிகளின் கருத்துக்களைக் கொண்டதாக அந்த நூல் இருந்தது. இன்றைய நிலையில் அந்த நூலின் விரிவுபட்ட பதிப்பு ஒன்றின் தேவையை நான் அதிகமும் உணர்கிறேன். சமீப எதிர்காலத்தில் அது சாத்தியப்படும் எனவும் நான் நம்புகிறேன்.

இப்போது வெளியாகியிருக்கிற புத்தனின் பெயரால்: திரைப்பட சாட்சியம் நூலை எனது இருபத்தி ஐந்து ஆண்டு கால நண்பர் மனுஷ்ய புத்திரனின் உயிர்மை பதிப்பகம் மிக நேர்த்தியாக, திரைப்பட ஸ்டில்களுடன் வெளியிட்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதத்தினால் அழித்தொழிக்கப்பட்ட ஈழமக்களின் இனப்படுகொலை சம்பவம் எனது இரண்டாவது நூலின் உடனடி உந்துதலாக இருந்தது.

ஈழப் போராட்டத்தில் எனக்கு இருந்த ஈடுபாடு, அதனது கலை இலக்கியம், திரைப்படம் சார்ந்ததாகவும் இருந்தது. பொதுவாக தத்துவம், அரசியல், கலை இலக்கியம், திரைப்படம் போன்ற தனித்தனித் துறைகள் கொண்டிருக்கும் இடைவெளிகளை பரஸ்பரம் இவற்றில் பிறிதொன்று நிரவி வருவதனை நான் எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன். அரசியல் செயல்பாடு, வாசிப்பு, காட்சி அனுபவம் போன்ற அனைத்துமே மனித விடுதலை நோக்கிய தேடலின் இணைந்த கண்கள் எனவே நான் புரிந்திருக்கிறேன்.

குருதிப் புனலில் மூழ்கடிக்கப்பட்ட ஈழவிடுதலைப் போராட்டம் என்பது உலக சினிமாவில் - மேற்குலகு, தென்னிந்தியா, தமிழகம், வடக்கு - கிழக்கு, சிங்கள மொழி என - ஏற்படுத்திய தாக்கத்தை நான் தொடர்ந்து அவதானித்தும், எழுதியும் வந்ததால், ஈழப் போராட்டத்தில் அம்மக்கள் எதிர்கொண்ட துயர்களுக்கான பிம்ப சாட்சியமாக நான் கடந்த பத்தாண்டுகளாக எழுதி வந்த திரைப்படம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு அமையும் எனக் கருதினேன். அதனது விளைவே புத்தனின் பெயரால் : திரைப்பட சாட்சியம் நூல்.

ஈழ விடுதலைப் போராட்டம் கருக் கொண்டதற்கான காரணங்கள், போராட்டத்தின் போக்கில் அது எதிர்கொண்ட முரண்கள், சவால்கள், நெருக்கடிகள், சிங்கள மக்களின் பாலான அதனது உறவுகள் மற்றும் மோதல்கள், இறுதிப் பேரழிவு என அனைத்தும் குறித்த, ஈழப் போராட்டம் குறித்த உலகெங்கிலும் வெளியான - ஆங்கில, தமிழ், சிங்கள, மலையாள, கன்னட மொழியிலான - திரைப்பட சாட்சியங்களை இந்த நூலில் நான் தொகுத்திருக்கிறேன்.

ஈழப் போராட்டத்தில் உங்களுக்கு ஈடுபாடு ஏற்படுவதற்கு அடிப்படையாக அமைந்த விடயங்கள் என்ன?

தேசிய விடுதலைப் போராட்டம் என்பது மார்க்சிய அரசியலின் பிரிக்கவியலாத அங்கம். மார்க்சிய மரபில் காலனியாதிக்கத்திற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டமும் அதனது கோட்பாடும் குறித்து வளமான பங்களிப்பு இருக்கிறது. அயர்லாந்துப் பிரச்சினையில் மார்க்ஸ் துவங்கி, கியூபப் புரட்சியில் குவேரா, வியட்நாமியப் பிரச்சினையில் கியாப் என தேசிய விடுதலைப் போராட்டத்தின் பண்புகள் தந்திரோபாயங்கள் என மார்க்சியர்களின் எழுத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. இந்தியாவின் அரசியல் என்பது காலனியாதிக்க எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராட்ட அரசியல்தான். காலனியாதிக்க தேசிய விடுதலைப் போராட்டத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி சாதகமாக நிலைபாடு எடுத்த மார்க்சியர்கள், இனத்தேசிய விடுதலை தொடர்பாக தளும்பலான நிலைபாடுகளையே கொண்டிருந்தார்கள்.

என்றாலும் ஈழவிடுதலைப் போராட்டம் அவர்களது அண்டை வீட்டில் எழுந்திருந்தது. பிற விடுதலைப் போராட்ட அனுபவங்களைத் எழுத்தில் தமிழக மார்க்சியர்கள் அறிந்திருக்க இரத்தமும் சதையுமாக ஈழவிடுதலைப் போராட்டம் தமிழக மார்க்சியர்களை தனக்குள் எடுத்துக் கொண்டது. விதிவிலக்காக நின்ற ஒரே அமைப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். இன்றளவிலும் ஸ்டாலினிய மரபையும் இனத்தேசிய உரிமையை மறுத்த வலிமையான தேசிய அரசையும் நம்புகிற கட்சியாக அது இருக்கிறது. நான் சார்ந்திருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அன்றும் இன்றும் ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆதரித்ததாகவே இருந்து வருகிறது. நாடு கடந்தவனாக வாழ்கிற நான் இன்று எந்த கட்சியினதும் இயக்கத்தினதும் சார்பாளன் இல்லை. இடதுசாரி மரபும் மார்க்சியக் கடப்பாடும் அதனது மனித விடுதலை தேடிய ஆன்ம அறமும் தான் என்னைக் கொண்டு செலுத்துகிறது.

இனத் தேசிய விடுதலைப் போராட்டமும் இந்திய மார்க்சியர்களும் குறித்த ஒரு சோதனைக் களமாக ஈழப் பிரச்சினை ஆகிவிட்டிருக்கிறது. ஈழவிடுதலைப் போராட்டமும், விடுதலைப் புலிகள் அதனைக் கொண்டு செலுத்திய விதமும் குறித்த கடுமையான விமர்சனங்களோடும் கூட, இலங்கை அரசின் தன்மை ஒரு கொடுங்கோன்மை அரசினது குணம் கொண்டது எனத் திட்டவட்டமாக நான் நம்புவதால் ஈழத் தமிழர்களுக்கு அவர்களது ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பு கொண்ட ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என நான் கருதுகிறேன். இந்தக் கடப்பாட்டிலிருந்தே ஈழ விடுதலையும் அவர்களது பண்பாடும், நான் அதிகமும் நேசிக்கிற அவர்தம் திரைப்பட முயற்சிகளும் குறித்த அக்கறைகள் எனக்கு எழுகிறது. 

ஈழ சமூகம் வரலாறு எழுதுவதில் மிகப்பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகின்றது. ஈழப் படைப்பாளிகளும், கலைஞர்களும், படிப்பாளிகளும் தமது சேமிப்பையும் ஆதாரங்களையும் நடைபெற்ற இனப்படுகொலைகளின்  இடையில் இழந்திருக்கிறார்கள். இந் நிலையில் ஈழ மக்கள் குறித்த ஆதாரபூர்வமான வரலாற்றை எத்துறை சார்ந்தும் எழுதுவது எப்படிச் சாத்தியமாகும்?

திரைப்படம் சார்ந்து மட்டுமல்ல எல்லாப் பிரச்சினைகளிலும் எல்லாக் காலங்களிலும் இப்பிரச்சினையை நான் எதிர்கொண்டிருக்கிறேன். நாவல் இலக்கியம் தமிழகத்தினோடு ஒப்பிடும் போது ஈழத்தில் பின்தங்கியிருப்பதான விமர்சனம் தமிழக எழுத்தாளர்களிடம் எப்போதுமே உண்டு.

கடந்த முப்பது ஆண்டுகளில் ஈழப் பிரச்சினை தொடர்பாக ஈழத்தினுள்ளும், ஈழத்திற்கு வெளியிலும் தமிழ், ஆங்கிலம், சிங்கள, மலையாள, மொழிகளில் நிறைய நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. புகலிடத்தில் ஈழப் படைப்பாளிகள் ஆங்கில மொழியில் மட்டுமே அனேகமாக இருபத்தி ஐந்து நாவல்களை எழுதியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலுமானவர்கள் பெண்கள் என்றாலும் இது குறித்த திரட்டப்பட்ட முழுமையான தரவுகள் இல்லை.

ஈழப் போராட்டம் குறித்து அ.சிவானந்தன், மைக்கேல் ஒன்டாஜி, ஷியாம் செல்வதுரை போன்றோரின் ஆங்கில நாவல்களை வாசித்த போது எனக்கு இப்படியான ஒரு நூல் எழுதவேண்டும் எனும் உத்வேகம் உருவானது. நண்பர்கள் மு.புஷ்பராஜன், இ.பத்மநாப ஐயர் மற்றும் எனது தொடர்புகளின் வழி நாவல்களைத் திரட்டத் துவங்கினேன். ஓரு கட்டத்தில் அது சாத்தியமில்லை எனும் முடிவுக்கே என்னால் வரமுடிந்தது.

முதலாவது, பொருள் வளமில்லாத ஒரு தனிமனிதனின் உத்வேகம் மட்டும் இதற்குப் போதுமானது இல்லை. இரண்டாவதாக வடகிழக்கிலும் சிங்கள மொழியிலும் எழுதப்பட்ட படைப்புக்களை அடையாளம் காண்பதும், அதனைப் பெறுவதென்பதும் பல்வேறு காரணங்களால் சாத்தியமில்லை. இப் பல்வேறு காரணங்களில் இயக்க முரண்பாடுகள், போர்ச் சூழல், உயிர் வாழ்தல் குறித்த பிரச்சினைகள் என்பன சில குறிப்பிடத்தக்க காரணங்கள்.

இதனையடுத்து நான் திரட்டிய சில நாவல்களை பத்மநாப ஐயரிடமே திரும்பவும் கையளித்தேன். அதனது தொடர்ச்சியாக எனது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வகையிலான ஈழம் குறித்த ஆங்கில, தமிழ் மொழி நாவல்கள் குறித்த வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையில் ஈழத்து அரசியல் நாவல் எனும்  குறுநூலை மட்டுமே என்னால் கொணர முடிந்தது. அந்நூலில் ஈழச் சூழலில் ஏன் காத்திரமான நாவல்கள் உருவாகவில்லை என்பதற்கான காரணங்களை எமது வாசிப்பின் அடிப்படையில் நண்பர் மு.புஷ்பராஜனும், நானும் ஒரு மிக நீண்ட உரையாடலின் வழி பதிவு செய்திருக்கிறோம். மு.நித்தியானந்தன் அந்நூலுக்கான முன்னுரையை வழங்கியிருந்தார். எழுத்தாளர் திலகவதி தமது அம்ருதா பதிப்பகத்தின் வழி அந் நூலினைப் பதிப்பித்தார்.

புத்தனின் பெயரால் : திரைப்பட சாட்சியம் எனும் நூல் தொடர்பான  எனது அனுபவம் வேறானது. இந்நூலில் நான் பேசியிருக்கிற சிங்களப் படங்களை கனடா சுயாதீனத் திரைப்படக் கழகத்தைச் சேர்ந்த ரதன், இலண்டன் விம்பம் திரைப்பட அமைப்பைச் சேர்ந்த ஓவியர் கே.கிருஷ்ணராஜா, அன்பு நண்பர் சாந்தகுணம், இந்த ஆண்டு கான் திரைப்பட விழாவில் தனது குறும்படத்தைத் திரையிட்ட பிரான்ஸ் ரவீந்திரன் பிரதீபன், சினிசங்கம் அமைப்பின் ராஜ் கஜேந்திரா போன்றவர்கள் எனக்குக் கொடுத்து உதவினார்கள்.

வடகிழக்கில் விடுதலைப் புலிகள் எடுத்த குறும்படங்கள் மற்றும் முழுநீளப் படங்களை பாரிஸ் நண்பர் மாணி நாகேஷ் மற்றும் இலண்டன் கே.வி.நந்தன், இ.பத்மநாப ஐயர் போன்றவர்கள் எனக்குக் கொடுத்து உதவினார்கள். புத்தனின் பெயரால் திரைப்படத்தினை பிரத்யேகமாக சில நண்பர்களுக்கென தனிக்காட்சியாக அதனது இயக்குனர்  திரையிட்டுக் காட்டினார். மலையாளப் படத்தை நண்பர் மு.புஷ்பராஜன் கனடாவிலிருந்து தமது பிள்ளைகள் வழி வருவித்துக் கொடுத்தார். பிற தமிழ், கன்னட, ஆங்கில மொழிப்படங்களை நானே எனது தொடர்புகள் வழி திரட்டினேன்.

கட்டுரைகள் எழுதப்பட்ட காலத்தில் எனக்குக் கிடைத்த இந்த உதவிகள் பிற்பாடு நூல் எழுதப்பட்ட காலத்தில் எனக்குக் கிடைக்கவில்லை. அரசியல் வேறுபாடுகளும், நான் நேரடியாகச் சம்பந்தப்படாத இணைய வெளியின் அவப்பக்கமான பின்னூட்டக் கலாச்சாரமும் - இதனை நான் எழுத நேர்ந்த எல்லா இணைய வெளிகளிலும் கடைசி வரையிலும் நிராகரித்து வந்திருக்கிறேன் -  எதற்கும் பிறிதொரு பக்கமும் இருக்கிறது என்பதனைச் சம்பந்தப்பட்டவர்கள் அறிய விரும்பாததாலும், நினைத்த அளவில் என்னால் இன்னும் சிறப்பாக நூலைக் கொண்டுவர இயலாமல் போயிருந்திருக்கக் கூடிய சூழலில், திரைப்படப் படைப்பாளிகளை நான் நேரடியாகத் தொடர்பு கொண்டதன் வழி இந்தத் தடைகளையும் என்னால் கடக்க முடிந்தது. விளைவாகவே புத்தனின் பெயரால் : திரைப்பட சாட்சியம் நூல் வெளியாகியிருக்கிறது.

புத்தனின் பெயரால் : திரைப்பட சாட்சியம் நூல் தொடர்பான  உங்கள் அனுபவம் என்ன?

எனது அனுபவத்தின் வழி நான் ஒரு விமர்சகனாக அல்லது திரைப்பட வரலாற்றில் ஆர்வமுள்ளவனாகக் கற்றுக் கொண்ட மிகப் பெரும் பாடம் இதுதான் : படைப்பாளிகளை நான் நேரடியாகத் தொடர்பு கொள்தலின் வழி வரலாற்றைச் செவ்வனே எழுத முடியும். படைப்பாளிகளுடன் நான் தொடர்பு கொண்டதில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் சில முக்கியமானவை. பெரும்பாலுமான புகலிடப்  படைப்பாளிகளிடம் தமது திரைப்படங்களின் ஸ்டில்கள் என்பதே இல்லை. சுயாதீனமான, வாய்ப்புள்ள படைப்பாளிகளின் நிலையே இதுவெனில் வடகிழக்கில் போர்ச்சூழலில் வெளியான திரைப்படங்களின் ஸ்டில்கள் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது.

எனவே ஒரு வேண்டுகோளை இந்த நேர்முகத்தின் வழி நான் படைப்பாளிகளின் முன் வைக்கிறேன். தங்களது திரைப்படத்தின் ஒரு பிரதியை ஸ்டில்களுடன் எனக்கு அனுப்பி வைத்து உதவுங்கள். வரலாற்றில் உங்களது படைப்புக்கள் பதிவுபெறும் எனும் உறுதிமொழியை நான் உங்களுக்கு அளிக்கிறேன். ஈழத் திரைப்படம் குறித்த வரலாறு என்பது இவ்வாறு தான் முழுமையடைய முடியும்.

திரைப்பட வரலாறு எழுதுவதில் இயக்க முரண்கள் என்று சொன்னீர்கள். குறிப்பாக இது குறித்த உங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வீர்களா?

திரைப்படங்கள் சார்ந்து இயங்குவதில் இது மிகப்பெரும் தடையாகவும், பிரச்சினையாகவும் இருப்பதால் இதனை நான் வெளிப்படையாகவே பேசவிரும்புகிறேன். எந்தப் பிரச்சினையும் எந்தச் சமூகத்திலும் கறுப்பு வெள்ளையாக மட்டும் பிரிந்திருக்கவில்லை. இந்த இரண்டு நிறங்களுக்கும் இடையில் பிற நிறங்களும் உண்டு. அரசியல்வாதிகள் அல்லாத இலக்கியவாதிகள், வரலாற்றாசிரியர்கள், தத்துவவாதிகள், திரைப்படக் கலைஞர்கள் இந்த வெளியில்தான் இயங்குகிறார்கள்.

ஈழ நிலைமையில் பேசுவதானால் ஈழ மக்களின் எல்லாப் பிரச்சினைகளை அணுகுவதிலும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் எனும் நிலையிலிருந்தே எல்லாப் பிரச்சினைகளும் அணுகப்படுகிறது. இது மிகவும் கொச்சையான பார்வை என நான் கருதுகிறேன். திரைப்பட அமைப்புக்கள், திரையிடல், தேர்வுகள் என அனைத்திலும் இந்த அடிப்படைகள் செயல்படுவது மிகவும் அவலகரமான நிலை என நான் நினைக்கிறேன்.

திரைப்படம் என்பது அடிப்படையில் ஒரு தொழில்நுட்பக் கலை வெளிப்பாட்டு வடிவம். இதில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் படம் செய்யலாம். விடுதலைப் புலி எதிர்ப்பாளர்களும் படம் செய்யலாம். இது இரண்டும் அல்லாதவர்களும் செய்யலாம். ஏன், எந்த விதமான அரசியலும் இல்லாதவர்களும் படம் செய்யலாம். திரைப்படம் என்பது அதனது அழகியல் விதிகளுக்கு உட்பட, எடுத்துக் கொண்ட பிரச்சினை - எமக்கு உடன்பாடு உள்ளது அல்லது அற்றது என்பதற்கு அப்பால் - சித்தரிக்கப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பது மட்டுமே திரைப்படத்தை மதிப்பிட உகந்த அடிப்படையாகும். திரைப்படத்தில் ஈடுபாடில்லாத, அதனைக் கலை அனுபவமாகக் காண முடியாத, எந்த அரசியல்வாதியும் இந்தப் பார்வையினைக் கொண்டிருப்பதில்லை. துரதிருஷ்டவசமாக இந்த நிலைமையே புகலிட சமூகத்தில் காணப்படுகிறது.

திரைப்படத்தின் தகமையைத் தீர்மானிப்பவர்களாகக் கறுப்பு வெள்ளை அரசியல்வாதிகளே நிறைந்திருக்கிறார்கள். எடுத்துக் காட்டுக்குச் சொல்கிறேன். ஈழ இளைஞர்களுக்கிடையிலான வன்முறைக் கலாச்சாரம் ஒரு பிரச்சினை. பாலுறவு வறுமை என்பது ஒரு பிரச்சினை. அகதி வாழ்வின் நிலையாமை என்பது ஒரு பிரச்சினை. நிறவாதம் என்பது ஒரு பிரச்சினை. பால் வேறுபாட்டு வன்முறை என்பதும் பிறிதொரு பிரச்சினை. தலைமுறை இடைவெளி என்பது ஒரு பிரச்சினை. இதனை விடுதலைப் புலிகள் எடுத்தால் தான் என்ன அல்லது விடுதலைப் புலிகள் அல்லாதவர்கள் எடுத்தால் தான் என்ன? இவைகள் முழு ஈழத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்லாவா? இதனை எந்த அரசியல் கொண்டவர் எடுத்தால் தான் என்ன? இந்தப் பார்வையை என்று வேறு வேறு அரசியல் கொண்டவர்கள் ஏற்பார்களோ அன்று தான் ஈழத் தமிழர்களிடையில் ஆக்கபூர்வமான திரைப்படக் கலாச்சாரம் தோன்றுவதற்கான சாத்தியமும் அமையும்.

இதனையே நான் வலியுறுத்துகிறேன். தொடர்ந்தும் வலியுறுத்துவேன். எனக்கும் அரசியல் உண்டு. எனது செயல் அனுபவத்தில் எனது வாசிப்பில் எனது காட்சி அனுபவத்தில் உருவான அரசியல் இது. இது கட்சி சார்ந்த இயக்கம் சார்ந்த அரசியலாக இருக்கத் தேவையில்லை. ஓடுக்குமுறையாளர்களோடு நான் ஒரு போதும் இல்லை. சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான விமர்சன மாரக்சியமே எனது அரசியல். இதனைக் குறித்த என் மீதான எத்தகைய விமர்சனங்களுக்கும் எதிர்வினையாற்றாது கடந்து சொல்லவே நான் விரும்புகிறேன்.

ஈழ சினிமா குறித்த நூல் என்று சொல்கிறீர்கள். புத்தனின் பெயரால் என்பது முழுக்க அரசியல் கருத்தாக்கம் அல்லவா? திரைப்படம் குறித்த ஒரு நூலுக்கு எதற்காக இத்தகைய அரசியல் அழுத்தம் கொண்ட ஒரு தலைப்பைத் தெரிவு செய்தீர்கள்?

உலக சினிமாவில், இன்னும் குறிப்பாக அமெரிக்க சினிமாவில் புத்தமதமும், புத்த மதம் வாழ்முறையாக இருக்கும் சமூகங்களும் பற்றி நிறையத் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. பெர்ட்டுலூசி, மார்டின் ஸ்கோர்சிசே போன்ற மிகப்பெரும் உலக இயக்குனர்கள் புத்தமதம் குறித்த திரைப்படங்களை எடுத்திருக்கிறார்கள். பிராட் பிட், ரிச்சர்ட் கீர் போன்ற ஹாலிவுட் நடிகர்கள் புத்தமதத்தினால் ஆகர்ஷிக்கப்பட்டவர்கள். புத்திசம் பிட்ரேய்ட் (Buddhism betrayed) என்பது ஸ்டான்லி தம்பையாவின் புகழ்பெற்ற புத்தகம். இந்த அறிவார்ந்த, திரைப்பட உலகச் சூழ்நிலையில் இலங்கை நிலை பற்றி புத்தனின் பெயரால் - இன் த நேம் ஆப் புத்தா திரைப்படம் - உலக சினிமா வெளியில் பிரவேசித்திருக்கிறது. அத்திரைப்படம் இலங்கையில் தடை செய்யப்பட்டிருக்கிறது. திரைப்படம் அரசியல் என இரு தளங்களிலும் புத்தனின் பெயரால் திரைப்படம் இலங்கை சமூகம் பற்றிய ஒரு குறியீடாக எனக்குத் தோன்றியது. இப்படம் குறித்த விரிவான கட்டுரை ஒன்றும் நூலில் உள்ளது. எனவே புத்தகம் பேசும் விடயத்துக்கு மிகப் பொருத்தமானது என இத்தலைப்பை நான் தேர்ந்து கொண்டேன்.

கடந்த முப்பதாண்டு இலங்கைக் கலாச்சாரத்தை, குறிப்பாகத் திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் அதனை ஈழத்தமிழ் மக்களது பிரச்சினைகளில் இருந்து பிரிக்க முடியாது. அதுசார்ந்த அரசியலில் இருந்தும் பிரிக்க முடியாது. ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களமொழித் திரைப்படக் கலைஞர்களும் கூட புத்தமத நிறுவனங்களது விழுமியங்களின் பெயரால்தான் இலங்கையில் ஒடுக்குமறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். நிகழ்ந்தவை அனைத்தும் புத்தனின் பெயரால், அவரது போதனைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஆகவேதான் நூலுக்குப் பொருத்தமானதான இந்தத் தலைப்பைத் தேர்ந்து கொண்டேன்.

இந் நூலின் சாராம்சமாக நீங்கள் சொல்ல விரும்பிய செய்தி என்ன?

ஈழ சினிமா குறித்த முழுமையான வரலாற்று நூல் எழுதுவது எனக்குச் சாத்தியமாயிருக்கவில்லை என்பதனை நான் தெளிவுபடுத்தியிருக்கிறேன். எனது அவதானத்தில் ஈழ சினிமா இனி இப்படித்தான் வகைப்படுத்த முடியும் என நினைக்கிறேன். விடுதலைப் புலிகளுக்கு முன்பான ஈழ சினிமா - விடுதலைப் புலிகளின் இராணுவ இருத்தலின் போதான சினிமா - விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமை அழிக்கப்பட்டதின் பின்பான சினிமா.

அரசியல் ரீதியில் இந்தக் குண வேறுபாடுகளைத் திட்டவட்டமாக வரையறுக்க முடியும் என நினைக்கிறேன். திரைப்பட வகையினம் எனும் அளவில் தமிழக ஜனரஞ்சக சினிமா மற்றும் யதார்த்த சினிமா எனும் இரு பெரும் வெளிப்பாட்டுக் கூறுகளினிடையில் இந்த மூன்று காலகட்டங்களிலும் ஈழ சினிமா பயணம் செய்திருக்கிறது.

முதல் கட்டத்தில் தமிழக ஜனரஞ்சக சினிமா மற்றும் யதார்த்த சினிமா இரண்டுக்கும் இடையிலான முரண்கள் இருந்தன. விடுதலைப் புலிகளின் இராணுவக் காலகட்டத்தில் அதனது உணரச்சிவசமான பண்பினால் தமிழக சினிமாவின் உணரச்சிகரமான ஜனரஞ்சகமான பண்பையே விடுதலைப் புலிகளின் பெரும்பாலுமான படங்கள் கொண்டிருந்தன.

இந்த இரு வேறு காலகட்டங்களுக்கும் மாறாகப் புகலிட நாடுகளில் புகலிடத்தின் ஆரம்ப காலப் படைப்பாளிகளான அஜீவன், அருந்ததி, புதியவன் போன்றவர்கள் தோற்றுவித்த சினிமாவாயினும் சரி, இன்று லெனின் சிவம், தமிழியம் சுபாஷ், ரவீந்திரன் பிரதீபன், சதா பிரணவன், ஐ.வி.ஜனா மற்றும் குவேரா-நெல்சன் சிவலிங்கம்  போன்ற இயக்குனர்களின் படங்களாயினும் சரி,  அது திட்டவட்டமான, உணரச்சிவசம் தவிர்ந்த யதார்த்த சினிமாவுக்கான பண்புகளைக் கொண்டிருக்கிறது என்பதை என்னால் அவதானிக்க முடிகிறது. ஈழத் தமிழர்களுக்கான தனித்துவ சினிமாவை இவர்கள் உருவாக்குவார்கள் எனும் நம்பிக்கையை இப்படங்கள் தருகின்றன. இத்திசை நோக்கிய ஒரு அவதானத்தை இந்நூலில் நான் முன்வைத்திருக்கிறேன்.

கடந்த முப்பதாண்டுகளில் வெளியான காத்திரமான சிங்களத் திரைப்படங்கள் அனைத்தும் தமிழ் மக்களின் பாலான பரிவையும், சிங்கள இனவாத அரசின் மீதான விமர்சனத்தையும் முன்வைத்ததாகவே இருந்திருக்கிறது என்பதனையும், அவர்கள் சிங்கள அரசினாலும், இராணுவத்தினாலும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதனையும், அவர்களது பெரும்பாலுமான திரைப்படங்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டிருக்கின்றன என்கிற செய்தியையும் நான் இந்நூலில் தெரிவித்திருக்கிறேன். இனவாத விஷத்தைக் கடந்த மாமனிதர்களாக சிங்களத் திரைப்படக் கலைஞர்கள் தமது படங்களில் உயர்ந்து நிற்கிறார்கள் என்கிற செய்தியையும் நான் சொல்ல விரும்பினேன்.

மூன்றாவதாக நான் சொல்ல விரும்பிய விடயம் மிக மிக முக்கியமானது. இதுவரையிலும் நடந்த விடுதலைப் போராட்டம் குறித்த திரைப்படங்கள் பெரும்பாலும் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றவுடன் அந்தந்த விடுதலை அரசுகளால் உருவாக்கப்பட்ட படங்கள். ரஸ்ய, சீன, கியூபத் திரைப்படங்கள் இத்தகையவைதான். இதுவன்றி மிகச் சிறிய அளவில் லத்தீன் அமெரிக்காவில் தலைமறைவு சினிமா என்பது உருவாகியிருக்கிறது. விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்திலேயே உலக அளவில் திரைப்படத்தில் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கியதாக ஈழ விடுதலைப் போராட்டம் இருந்திருக்கிறது.

இதே மாதிரி உலக சினிமாவில் தாக்கத்தை உருவாக்கிய இன்னொரு போராட்டம் பாலஸ்தீன மக்களது விடுதலைப் போராட்டம். இந்தத் தாக்கத்தினை மிகச் சரியான முறையில் இன்னும் மேலெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு இன்றைய ஈழ சினிமாவின் தலைமுறைக்கு இருக்கிறது என்பதையும் நான் இந்நூலின் வழி சொல்ல விரும்பினேன்.

இங்கு இன்னுமொரு செய்தியை நான் பதிய விரும்புகிறேன். பாலஸ்தீன திரைப்பட விழா என்பதனை இலண்டன் டேட் கலையகத்துடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் இலண்டனின் பாலஸ்தீன திரைப்பட நேயர்கள் நடத்தி வருகிறார்கள். பாலஸ்தீனர்கள் அல்லாத மக்களுக்கும் தமது வாழ்வையும், பிரச்சினைகளையும் அவர்கள் எடுத்துச் செல்கிறார்கள்.

ஈழத் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களுக்கும் இத்தகைய பொறுப்புணர்வு உண்டு. இதற்கு நான் தனியனாக எதிர்கொண்ட எல்லாத் தடைகளையும், மிகக் குறுகிய மாறுபாடுகளையும் அவர்கள் கடந்து செல்லவேண்டும். அது எவ்வாறு சாத்தியப்படும் என்பதனை எனக்குச் சொல்ல முடியவில்லை.

இறுதியாக ஒரு கேள்வி. அரசியல், இலக்கியம், தத்துவம் என எந்தக் கட்டுரையிலும் திரைப்படம் குறித்த குறிப்புக்கள் என்பது உங்களைத் தொடர்ந்து வருகிறது. திரைப்படம் உங்களது எழுத்துக்களில் இவ்வளவு முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம் என்ன?

இரண்டு காரணங்கள். முதலாவதாக எம்.ஜி.ஆர். இரண்டாதாக இத்தாலிய மார்க்சியர் அந்தோனியோ கிராம்ஸி.

மரபாக நான் சார்ந்திருந்த மார்க்சியக் கட்சிகள் திரைப்படம் குறித்த ஒரு விதமான அலட்சியமான பார்வையையே கொண்டிருந்திருக்கின்றன. இன்று வரையிலும் இடதுசாரிகளின் பார்வை இப்படியாகவே இருப்பது ஒரு பெரும் சோகம். மாறாக லெனின், காஸ்ட்ரோ போன்றவர்கள் திரைப்படத்தின் வல்லமையை அறிந்திருந்தார்கள். சதாம் குசைன், கொமேனி போன்றவர்களும் அதனது வல்லமையை அறிந்திருந்தார்கள். திராவிட இயக்கத்தவரும், விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனும் அதனது முக்கியத்துவத்தினை அறிந்திருந்தார்கள்.

எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் பெயர் தமிழக கலாச்சார வரலாற்றில் ஒரு பெரும் நிகழ்வு என்பது எனது அவதானம். இனம், மொழி, சாதி போன்றவற்றை மீறியவராக அவர் இருந்தார். திரைப்படத்தின் மூலமே இந்நிலையை அவர் உருவாக்கினார். அந்நிகழ்வு இன்றுவரை தொடர்கிறது.  இதனை மக்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்கிற எவரும் மறுதளிக்க முடியாது.

எனது மார்க்சிய அரசியல் நிலைபாடே என்னை இன்று வரையிலுமான எம்.ஜி.ஆர். ரசிகனாக இருத்தி வைத்திருக்கிறது என முழுமையாக நான் நம்புகிறேன்.

அந்தோனியோ கிராம்சியினது கலாச்சாரம் குறித்த எழுத்துக்களை வாசித்தபோது, மேலாண்மை மற்றும் நிலவும் அதிகார அமைப்புக்கு இணக்கப்படுத்துதல் போன்றவற்றை வாசித்த போது, அனைத்தும் தழுவி அவர் இக்கருத்தாக்கத்தினை எடுத்துச் சென்ற போது, வெகுஜனக் கலையாக திரைப்படம் பண்பாட்டு மேலாண்மையில் வகிக்கும் பாத்திரத்தினையும், அதனது செல்வாக்கினையும் என்னால் உணர முடிந்தது.

திரைப்படம் வெகுமக்கள் கருத்துருவாக்கத்திலும் சரி, அவர்களது ஆன்மீக வெற்றிடத்தை நிரவுவதிலும் சரி மிகப்பெரும் பாத்திரம் வகிக்கிறது என்பதனை நான் திட்டவட்டமாக உணரத் துவங்கினேன்.

ஜனரஞ்சக சினிமா மீது எனக்கு இருந்த ஒவ்வாமை இவ்வாறு தான் விலகியது. வெகுமக்களோடு தொடர்பு கொள்வதில் திரைப்பட சாதனத்தை விட வேறு எதுவேனும் எனக்குத் தட்டுப்பட்டால் திரைப்படத்தை வீசிவிட்டு அதனை நான் தேர்ந்து கொள்வேன் என்றார் வங்க சினிமாவின் அமரன் ரித்விக் கடக். சினிமாவின் வல்லமை சொல்ல இந்த மணிவாக்கியம் ஒன்று போதும் என நினைக்கிறேன்.

புத்தனின் பெயரால்: திரைப்பட சாட்சியம்  கிடைக்குமிடம் குறித்த விவரங்கள்

240 பக்கங்கள் கொண்ட புத்தனின் பெயரால் : திரைப்பட சாட்சியம் நூலினை தமிழகத்தின் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. நூலின் விலை 140 இந்திய ரூபாய்கள். தமிழகத்திலும் இலங்கையிலும் வாழ்கிறவர்கள் உயிர்மை பதிப்பகத்தின் நூல்களை விநியோகிக்கிற புத்தக விற்பனையாளர்களிடம் இதனைப் பெறலாம்.

ஐரோப்பாவில் வாழ்கிறவர்கள் யமுனா ராஜேந்திரனிடம் அவரது மின்னஞ்சலான yamunarn@hotmail எனும் முகவரிக்கு எழுதி, முதல் வகுப்பு தபால் கட்டணம் உள்பட நூலின் விலையாக £8.00 பவுண்கள் அனுப்பி நூலினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

7/29/2010 12:42:37 PM

உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

 
புதினங்கள்
செய்திகள்